சனி, மார்ச் 26, 2011

காதல் வெண்பாக்கள் 18

           செய்வினை 

உனக்கென்ன என்மேல்
   ஒருபார்வை வீசி 
எனக்கென்ன என்று 
   இருந்தாய்- கணக்கின்றி 
நான்தானே உன்நினைவில்   
   நாளைக் கழிக்கின்றேன் .
வீண்தானோ எந்தன் 
    விதி ?  
  

      
         பயனிலை

பார்வையில  ஒன்றுமில்லை 
   பாவிப் பயமக்கா 
ஆர்வமில்லை உன்மீது 
   ஆளைவிடு - தேர்வெழுதி 
பாஸாகப் பாரப்பா 
   வீணாய் அடிவாங்கி 
பீஸாகிப் போகாதே 
     போ .
   

செவ்வாய், மார்ச் 22, 2011

வரம் வேண்டும்


ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
   அறுத்தே வாழும் வரம் வேண்டும்
காசும் பணமும் பொன்னும் பொருளும் 
   கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்

பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும் 
   பொடிப் பொடியாகும் நிலை வேண்டும்
மண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும் 
   மறந்தே போகும் மனம் வேண்டும் 

வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும் 
   வாடிப் போகும் உடல் வேண்டும் 
போலிச் சுகங்கள் தேடும் உள்ளம்
   பொசுங்கிப் போகும் நிலை வேண்டும் 

உண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும் 
   உதறித் தள்ளும் உரம் வேண்டும்
இன்னும் இன்னும் என்னும் ஆசை
   இல்லா தொழியும் வரம் வேண்டும் 

பாழும் உலகின் பாவம் யாவும் 
   பார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும் 
வாழும் போதே மரணம் வந்தால் 
   வா-வென்றழைக்கும் மனம் வேண்டும் 

வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும் 
   வேண்டா தாகும் நிலை வேண்டும்
ஆண்டவன் எந்தன் அருகே வந்தால் 
   அலட்சியம் செய்யும் மனம் வேண்டும். 

                                                   -சிவகுமாரன்
                                                     01-01-1993     
   

வியாழன், மார்ச் 17, 2011

முழக்கங்கள்




படைமுழக்கம் 


நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
ஊடுருவும் பேர்வழிகள் வால்   நறுக்குவோம்.
பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம். 
ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்.


கொள்கை முழக்கம் 


வேட்டி சட்டை வெள்ளை கட்டி கூட்டம் போடுவோம்
பேட்டி  என்றால் பொய்யவிழ்த்து வேடம் போடுவோம்
கேடியாக வாழ்ந்த கதை கிழித்துப் போடுவோம்
கோடியாக சேர்த்துவைத்து ஒளித்துப் போடுவோம்
கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வாழ்த்திப் பாடுவோம்
சீட்டு இல்லை என்று சொன்னால் நாறப் போடுவோம்
ஓட்டுவாங்க ஆளுக்கொரு நோட்டு நீட்டுவோம்
போட்டதெல்லாம் லஞ்சம் வாங்கி ஈடு கட்டுவோம்
ஒளிச்சு வச்ச சொத்துக்களை சுவிஸ்சில் போடுவோம்
இளிச்சவாயி மக்களுக்கு நாமம்  போடுவோம்.





கவிமுழக்கம் 


செவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம
 புவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்
மதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்
நிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்
இருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்
பொருள்விளைக்கும் புதுமையெல்லாம் தமிழ் புகுத்துவோம்
இறைபாடி எழில்பாடி இருத்தல் போதுமா -தனிமைச்
சிறைக்குள்ளே செந்தமிழை நிறுத்தல் ஆகுமா ?
சேர்த்து வைத்த கோபமள்ளி தீ வளர்ப்போமா ?
வார்த்தைகளால் யுகப்புரட்சி வரவழைப்போமா ?
எளிமை நமது ஆயுதமாய் இருந்தது போதும்  - நம்
வலிமை தன்னை வரலாறு உணர்ந்திடச் செய்வோம். 


ஜனமுழக்கம் 















அரிசி பருப்பு எண்ணெய் வாங்க வெயிலில் காய்கிறோம்
வரிசையினில் நின்று நின்று வாழ்ந்து சாகிறோம்.
இலவசத்தில் அடிமையாகி சுயம் இழக்கிறோம் .
கலைஞர் டிவி ஆட்டம் பார்த்து கனவு காண்கிறோம்

எத்தனைநாள் இப்படியே வாழ்ந்திருப்பது ?-ஒரு 
தப்படியும் ஏறாமல் தாழ்ந்திருப்பது ?
ஆட்சிமாற்றம் ஒன்றுமட்டும் விடிவு ஆகுமா ?
காட்சிமாற்றம் நாடகத்தின் முடிவு ஆகுமா ?
கட்டுண்டு பொறுத்திருந்தால் காலம் மாறுமா ?- இல்லை 
நட்டாற்றில் நம்மை விட்டு காலை  வாருமா  ?
இருட்டை எரிக்க  எரிதழலை ஏந்துவது யார்?
திருட்டு பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ?
எகிப்து லிபியா நாட்டில் மக்கள் விழிக்க வில்லையா ?
தகிக்கும் புரட்சி எரிமலையாய் வெடிக்கவில்லையா?  
தக்கதொரு தருணம பார்த்து காத்திருக்கிறோம் 
மக்கள் சக்தி என்னவென்று காட்டப் போகிறோம்  


                                                                    - சிவகுமாரன்  


நன்றி
இந்தக் கவிதையை என்னை எழுதத் தூண்டிய திரு G .M.பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு . 

ஞாயிறு, மார்ச் 13, 2011

வேண்டாம் தாயே


இயற்கைத் தாயே இயற்கைத் தாயே 
பயத்துடன் உன்னை பணிந்தோம் தாயே
இனிதாய் இதமாய் சுமந்த நீயே 
மனிதரைத் தின்ன மனந்  துணிந்தாயே  
குச்சுக் குடிசையில் குடியிருந் தோரை
மச்சு வீட்டில் மகிழ்ந்திருந் தோரை
வேறு பாடின்றி வெறிகொண் டெழும்பி 
கூறு போட்டரிந்து கொலைவெறி யோடு 
கொஞ்சம் கூட மனமில் லாமல் 
நெஞ்சைப் பிளந்து நீ தின்றாயே !
வறுமைப் பேய்கள் வாட்டும் நோய்கள் 
குறுகிய மனங்கள் குதர்க்க மதங்கள்
அரசியல் அரக்கன் அணு உலை மிரட்டல்
குரல்வளை நெரிக்கும் ஓசோன் ஓட்டை 
எடுத்தது போக எஞ்சிய இரத்தம்
நீகுடித்  தாயே நியாயம் தானா?
பாவம் செய்யும்  மனிதரைக் கண்டு
கோவம் கொண்டு நீ கொஞ்சம் திமிறி
விரலசைத் தாலே வீணாய்ப் போவோம்
குரலெழுப் பாமல் கொன்று போட்டாயே
உன்னிலே பிறந்து உன்னால் வளர்ந்து
உனக்குள்ளே தான் உறங்கிப் போவோம்.
உண்மை தானவை மறுத்தோம் இல்லை.
ஆனால் தாயே அதற்குள் எம்மை 
அடியோ டழிக்கும் அவசரம் ஏனோ ?
தாயே தனது தாகம் தீர்க்க 
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு 
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் . 



-சிவகுமாரன்

புதன், மார்ச் 09, 2011

சின்னஞ்சிறு நெருப்பு

















வாசலிலே ரோஜாச்செடி
   வைத்து நிதம் நீர் தெளிக்க
   வாசமலர் நித்தமொன்று  மலரும்- உடன்
ஊசிமுனை முள்ளுமொன்று வளரும்.

நட்டநடு ராத்திரியை
   பட்டப்பக லாக்கிவிட
   நாள்முழுதும் மின்விளக்கு எரியும். - அதைத்
தொட்டு விட்டால் பின்விளைவு புரியும்.

ஒற்றைத்திரி நெய்விளக்கில்
   ஊற்றிவைத்த எண்ணெயொடு  
   ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?

செல்லும் வழி கல்லு முள்ளு
   செய்வதெல்லாம் தில்லுமுல்லு 
   சேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம் - அதைத்         
தள்ளிவிட்டு நில்லாமல் என் ஓட்டம் .

என்னுடைய கன்னித் தமிழ்
   ஈசன்தந்த சங்கத் தமிழ்
   ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு
.  

                                            


                                              

                                          
                                                                   -சிவகுமாரன் 

                                                    

      

வியாழன், மார்ச் 03, 2011

அருட்கவி



இறையைத் தேடும் என்பய ணத்தில்
நிறையும் குறையும் நிரம்பி வழிய 
கவிதை பலவும் கணக்கின் றெழுதிக் 
குவித்தேன் தொழுதேன் குமபிட் டழுதேன்.
இரங்கா மனதுள் இறங்கின கவிகள்.
வரங்களைக் கேட்டேன் திறந்தன செவிகள்.
புவனம் காப்போன் பெயரைச் சொல்லி 
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி 
அருட்கவி என்னும் பெயரில் அதனை
தருகிறேன் உமக்கு தனியே வலையில்.
அன்பர் அனைவரும் ஆதர வளித்து
இன்பத் தமிழின் இனிமை சுவைக்க 
இருகரம் கூப்பி இதயம் கனிந்து 
வருக வருகென வரவேற் றழைத்தேன்

.

 
   சிவகுமாரன் 
 www.arutkavi.blogspot.com