சனி, அக்டோபர் 30, 2010

ஏக்கம்

எங்க ஊரு
எக்ஸ் எம்.எல்.ஏ.வை
வெட்டி சாச்சுப்புட்டாக
விரோதிக சிலபேரு.


காரு பஸ்சு ஓடலை  
கடை கண்ணி தெறக்கலை
நாலு நாளா
நாறிப் போச்சு பொழப்பு.


வியாபாரம் இல்லாத
விரக்தியில இப்படி
காய்கறி கடை
கண்ணம்மா புலம்பினா.


"எங்களுக்கும் கெடச்சிருக்கும்
இடைத்தேர்தல் அதிர்ஷ்டம்.


காலையில் எழுந்திருச்சி
கண் முழிச்சு பாத்தா
கதவிடுக்கில சொருகிருக்கும்
கரன்சி நோட்டு.


 மாறி மாறி
மந்திரிக வருவாக.
ஆரத்தி எடுத்தாலே  
ஆயிரம் ரெண்டாயிரம்.


குண்டு குழி ரோடு
கும்மிருட்டு வீடு.
காத்து வரும் குழாயி
காவு வாங்கும் பாலம்
பூச்சி தின்ன பருப்பு
புழு நெளியும் அரிசி
எல்லாமே நொடியில்
இல்லாமே போகும்.
மாயாஜாலம் மாதிரி
மாறிப்போகும் எல்லாம்.

நெனச்சாலே மனசு
நெறைஞ்சிருக்கு முழுசா.

 பாவி மனுஷன்
பதவியில இருந்தப்பவே
கொன்னுருக்கக் கூடாதா
கொலைகாரப் பயலுக.

                       -சிவகுமாரன்.

சனி, அக்டோபர் 23, 2010

தேர்தொலைக்காட்சிகள்

இந்திய தேர்தல் வரலாற்றில்
முதன்முறையாக - என்று
விளம்பரம் செய்ய வேண்டியதுதான்
பாக்கி.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
போலாகிவிட்டன
தேர்தல் காட்சிகள்.


சூப்பர் சிங்கர் மாதிரி
சீனியர்ஸ்-க்கான
சீசன் முடிந்து
ஜூனியர்ஸ்-க்கான யுத்தம்
தொடங்கிவிட்டது.
கிரீடம் யாருக்கு
என்பதில்.


டீலா  நோ டீலா 
போலாகிவிட்டது
கூட்டணி பேரங்கள்.
தனக்கான பெட்டியில்
என்ன இருக்கிறது
என்று தெரியாமலேயே.


அணு அளவும் பயமில்லை மாதிரி
ஆகிப்போனது
போராட்டங்கள்.
ஆபத்து ஏதுமில்லை என்று
அறிந்து கொண்டுதான்
போராடத் தொடங்குகிறார்கள்.
உணவு இடைவேளைக்கிடையில்
உண்ணாவிரதம் மாதிரி.


அசத்தப் போவது யாரு மாதிரி
நடக்கிறது
பிரச்சாரங்கள்.
கன்னாபின்னாவென்று
ஜோக்கடித்துவிட்டு
கடைசியில்
மெசேஜ் சொல்வது மாதிரி
இஷ்டத்துக்கு
எதிரணியை திட்டிவிட்டு
இறுதியாய்
ஓட்டு கேட்கிறார்கள்.


சோம்பேறிகளாகி விட்டார்கள்
மக்கள்.
வாக்குச்சாவடிக்குக் கூட 
வருவதில்லை பலர்.
தமிழகத்தின் செல்லக்குரலுக்கான
தேடல் மாதிரி
எஸ்.எம்.எஸ். மூலம்
முதல்வரைத்
தேர்ந்தெடுக்கச் சொன்னால்
வசதியாகிப்போகும்.
கூடவே
குலுக்கல் முறையில்
வீட்டுமனையும்
வில்லாவும் தரலாம்.


ஊழலில் பெரியவன்
நீயா நானா என்று
கேள்விகேட்கப் போகிறார்கள்
கோபிநாத் மாதிரி
அரசியல்வாதிகள்.
ஓட்டுக்கு
பணம் வாங்குவதும்
ஊழல் தானே.


ஜாக்பாட் மாதிரி
எல்லாமே இலவசமாய்க்
கிடைத்துவிடுவதால்
எதிர்பார்க்கிறார்கள் மக்கள்
இன்னமும்.
புரிவதில்லை பலருக்கு
குடிசையில் கொடுத்து
டாஸ்மாக்கில் 
பிடுங்கிக் கொள்வது.  


மானாட மயிலாட
ஜோடி நம்பர் ஒன்-
போலத்தான்
பொழுபோக்கு நிகழ்ச்சிகளில்
ஒன்றாக
புரிந்துகொள்ளப் படுகிறது
தேர்தல் பலருக்கு.
எப்போது
உறைக்கப் போகிறது,
இது கதையல்ல நிஜம்
என்று?


அது இது எது
இப்படித்தான் இருக்கிறது
தேர்தல் முடிவுகள்.
அதுவுமில்லாமல்
இதுவுமில்லாமல்
புது
அதுவும்
பொது
ஒன்று வேண்டும்.
அது
எது?

          -சிவகுமாரன்

புதன், அக்டோபர் 13, 2010

வழிப் பிள்ளையார்

கோடி கோடியாய்
கொட்டிக் கிடக்குது
சுவிஸ் வங்கிகளில்


தங்கமும் வைரமும்
தளும்பி வழியுது
திருப்பதி உண்டியலில்


வெளைஞ்சது எல்லாம்
வீணாய்ப் போகுது
தானியக் கிடங்குகளில்


கணக்கே இல்லாமல்
கடைத் தேங்காய்கள்.

வயிறு ஒட்டிய
வழிப் பிள்ளையார்கள்.

எடுத்து உடைக்குமா
இ.பி.கோ. கரங்கள் ?

                  -சிவகுமாரன்

செவ்வாய், அக்டோபர் 05, 2010

சக்தி

ஆளுங்கட்சிக்குப்
போடச்சொன்னார் அப்பா.
இந்தத் தடவை
எதிர்க்கட்சிக்கு போடும்மா-ன்னான்
அண்ணன்.

எதுவுமே சரியில்லை
49 -O போடும்மான்னு
சொன்னேன் நான்.

விடியல்லேயே போயி
விரல்ல மை வச்சுகிட்டு
வந்த அம்மாகிட்ட
எதுக்கும்மா போட்டே-ன்னேன்.

சிரிச்சுகிட்டே சொன்னா
ஜெயிக்கிற கட்சிக்குன்னு.

சீரியலும் பொரியலும்
தவிர
வேறெதுவும் தெரியாத
அம்மாவுக்கு
எப்படி தெரியும்
எது ஜெயிக்கும்னு.

                           -சிவகுமாரன்

சிவப்புக்கம்பளம்

சிங்கள வீதியெங்கும்
சீன தேசத்தின்
சிவப்புக்கொடிகள்.

கம்யூனிசம்
காலூன்றி விட்டதாக
கர்வப்பட்டுக் கொள்ளலாம்
காம்ரேட்கள் .

பேரினவாதப் பேய்கள்
பிணந்தின்றபோது
பொதுவுடைமை வாய்கள்
பூட்டிக் கிடந்ததின் மர்மம்
புரிகிறதா இப்போது?

                         -சிவகுமாரன்

ஞாயிறு, அக்டோபர் 03, 2010

காதல் வெண்பாக்கள் 8

     நாணம்?
ஓர விழியால்
  ஒளிந்தே எனைப் பார்ப்பாள்.
பாரடி என்றே
  பகர்வேன் நான் - நேராக
காண மனம் கூசி
  காலால் நிலம் கீறி
நாணிக் கடிப்பாள்
  நகம்.






       கவி ஊற்று
காதல் கவியெழுத
  கற்பனைகள் தோன்றாமல்
மோதும் கருத்து
  முரண்பட்டால் - ஏதும்நான்
எண்ணாமல் பின்செல்வேன்
  ஏறெடுத்துப் பார்த்துவிட்டு
கண்ணாலே சொல்வாள்
                     கவி.
                                                                     -சிவகுமாரன்

                   

வெள்ளி, அக்டோபர் 01, 2010

அறுவடை அரசியல்

எங்கள் பரந்த வயலை
பசுமையாக்க
எங்கிருந்தோ வந்தார்கள்
அவர்கள்.

கூலி வாங்கியவர்கள்
விதைகளை விழுங்கிவிட்டு
வெட்டரிவாளை மட்டும்
விதைத்துவிட்டு வந்தார்கள்.

சாணை பிடித்துத்
தருவதாய் சொன்னவர்கள்
கூர்மையை சோதிக்க 
குத்திப் பார்த்தார்கள்
எங்கள் வயிற்றிலேயே.

அறுவடைக்காக
அழைத்து வந்தோம் அவர்களை.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 
வைக்கோலை மட்டுமே
வைத்துவிட்டுப் போனவர்கள்
கூலி குறைவென்றும்
குறைபட்டுக்  கொண்டார்கள்.

அடுத்தவருடம்
சுதாரித்துக் கொண்டோம்
நாங்களே உழுது
நாங்களே விதைத்தோம்.
அறுவடைக்கு மட்டும்
அவர்களே வந்தார்கள்.

                                 -சிவகுமாரன்.